Skip to main content

40 ‘பெயில் பெட்டிஷன்கள்’ தாக்கல் செய்த ஹெலிகாப்டர் சகோதரர்கள்!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

Helicopter brothers who filed 40 ‘bail petitions’!

 

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் சகோதரர்கள் எம்.ஆர். கணேஷ், எம்.ஆர். ஸ்வாமிநாதன் ஆகிய இருவரும் தங்கள் மீதான 40 வழக்குகளிலும் தங்களைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியே தலா 40 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். 

 

இதற்கிடையே, இவ்வழக்கில் தேடப்பட்டுவரும் முக்கிய குற்றவாளியான 70 வயது ரகுநாதன் குடும்பத்துடன் தலைமறைவாகி போலீசாரின் கையில் சிக்காமல் இருந்துவருகிறார்.

 

ஹெலிகாப்டர் சகோதரர்கள் எனப்படும் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர். கணேஷ், எம்.ஆர். ஸ்வாமிநாதன். இவர்கள் இருவரும் இணைந்து ‘விக்டரி ஃபைனான்ஸ்’ என்ற நிதி நிறுவனத்தை நடத்திவந்தனர். இதில் முதலீடு செய்திருந்த பொதுமக்களுக்கு இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி ஏமாற்றியதுடன், பணத்தைத் திருப்பிக் கேட்ட தங்களை அடியாட்களை வைத்து மிரட்டியதாக அதே பகுதியைச் சேர்ந்த ஜஃபருல்லா, ஃபைரோஜ் பானு தம்பதியினர் ஜுலை 13ஆம் தேதி அப்போதைய மாவட்ட எஸ்.பி. தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் நேரில் புகார் மனு அளித்தனர். அதனடிப்படையில், மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர். 

 

பின் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள வேந்தன்பட்டியில் பண்ணை வீடு ஒன்றில் பதுங்கியிருந்த ஹெலிகாப்டர் சகோதரர்களைத் தனிப்படை போலீசார் ஆகஸ்ட் 5ஆம் தேதி மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அதன் பின்னர், அவ்விருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

மேலும், எம்.ஆர். கணேஷின் மனைவி அகிலாண்டம், மைத்துனர் ராமச்சந்திரன், அலுவலக மேலாளர் ஸ்ரீகாந்த், உதவி மேலாளர் ஸ்ரீதரன், ஊழியர் மீரா, வெங்கடேசன், சோலைசிவம் உள்ளிட்டோரையும் கைது செய்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான 70 வயது ரகுநாதன், இதுவரை பிடிபடாமல் தொடர்ந்து குடும்பத்துடன் தலைமறைவாக உள்ளார். அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரது வீடு பூட்டிக்கிடப்பதாகவும், அவரது செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அவரை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.

 

தங்களை ஏமாற்றியதாக பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 40 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இவை தவிர, இன்னும் 10-15 மனுக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக கைது செய்யப்பட்ட ஹெலிகாப்டர் சகோதரர்கள் கணேஷ், ஸ்வாமிநாதன் ஆகிய இருவரையும் மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். 

 

இவ்வழக்கு தொடர்பாக தங்களைப் போலீஸார் கஸ்டடி எடுத்து விசாரணை செய்து முடித்துவிட்டதால் தங்களின் உடல் நலன் கருதி தங்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க வேண்டும் எனக் கோரி சகோதரர்கள் கணேஷ், ஸ்வாமிநாதன் ஆகிய இருவரும் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியே தலா 40 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

 

இவ்வழக்கில், கணேஷ், அவரது மனைவி அகிலாண்டம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் 4 வயது குழந்தையை வீட்டில் வேலைக்காரப் பெண்கள் பராமரித்துவருகின்றனர். பெற்றோர் இருவரின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் அக்குழந்தை தவித்துவருவதாகவும், எனவே குழந்தையின் நலன் கருதி தன்னை பிணையில் விடுவிக்க வேண்டும் என்றும் கோரி அகிலாண்டம் தனியாக மனு தாக்கல் செய்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்