சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், "அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும். சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 11 இடங்களில் அதீத கனமழை பெய்துள்ளது. 20 இடங்களில் மிக கனமழையும், 50 இடங்களில் கனமழையும் பதிவானது.
கடலூர், நாகை, திருவாரூர், இராமநாதபுரம் மாவட்டங்களில் அதீத கனமழை தொடரும். தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை இயல்பை விட 2% குறைவாக பெய்துள்ளது. நேற்று வரை 16% வரை குறைவாக இருந்த நிலையில் ஒரே நாளில் 14% அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. தமிழகத்தில் இயல்பான மழையளவான 37 செ.மீ.யில் இதுவரை 36 செ.மீ. மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 23 செ.மீ.க்கு பதில் 34 செ.மீ. அளவுக்கு பருவமழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 47 செ.மீ.க்கு பதில் 29 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. மன்னார் வளைகுடாவில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலையில் தாழ்வு மண்டலமாக மாறும்.
தமிழகத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, அரியலூர், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" இவ்வாறு அவர் கூறினார்.