திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளான ஜவ்வாது ராமசமுத்திரம், அலசந்தபுரம், திம்மாம்பேட்டை, அம்பலூர் உட்பட பல பகுதிகளில் ஜூன் 29- ஆம் தேதி அன்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது. பலத்த மழையால் ஜவ்வாது ராமசமுத்திரம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்திருந்தது. மேலும் அலசந்தபுரம் பகுதியில் உள்ள மன்னாற்றில் வெள்ளம் ஏற்பட்டு பாலாற்றில் உள்ள அம்பலூர் வரை தண்ணீர் வந்தது.
பாலாற்றில் மழைநீர் வெள்ளம் வருவதைக் கண்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் தண்ணீரை வரவேற்கும் விதமாக கற்பூரம் ஏற்றி மலர் தூவி வரவேற்றனர். இதனிடையே வருவாய்க் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் மற்றும் வட்டாட்சியர் சிவபிரகாசம் ஆகியோர் அப்பகுதிக்கு நேரில் சென்று மழையால் சேதம் எதாவது ஏற்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர்.
ஆற்றுப் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக மணல் கொள்ளை நடந்துள்ளதால், ஆறுகள் பள்ளமாகவும், ஏரிகள் மேடாகவும் உள்ளது. கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் மழை வெள்ளம் வந்தாலும் ஏரிகளுக்குச் சென்றடைவதில்லை. பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர் நிலைகளைத் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு கோடை வெயிலின் தாக்கத்தால் பாலாற்று படுகையில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் முற்றிலுமாக கருகின. மேலும் நிலத்தடி நீர்மட்டம் 1,000 அடியிலிருந்து 1,500 அடிக்குக் கீழ் சென்றது.
இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் சூழல் ஏற்பட்டது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.