வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக மதுரையில் கனமழை காரணமாக மதுரை மாநகர் பகுதிகளான தல்லாகுளம், கோரிப்பாளையம், வண்டியூர், விளாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பெய்துள்ளது. இதன் காரணமாக செல்லூர், ஆணையூர் கண்மாய்கள் நிரம்பி உள்ளதால் மதுரை விளாங்குடி பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நெல்லை, தென்காசி, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் நாமக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.