தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன்படி, சென்னையில் நேற்று பகலில் மிதமான மழை பெய்த நிலையில், இரவு நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. திருவொற்றியூர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது. வடசென்னையிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
சென்னையில் சாந்தோம், இராயப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்க்கம், சூளைமேடு, வடபழனி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே சாரல் மழை பெய்தது. பின் நேற்று இரவு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதேபோல், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது.
வரும் 4ம் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.