தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஐந்து நாட்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 12ஆம் தேதிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காரைக்கால், புதுச்சேரி, கன்னியாகுமரி பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை இரண்டு நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. பலத்த காற்று வீசும் என்பதால், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை நந்தனத்தில் 7 சென்டி மீட்டர் மழையும், பூந்தமல்லி, தாம்பரம், கலவை (ராணிப்பேட்டை) ஆகிய இடங்களில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.