நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று (25/11/2021) மிக கனமழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். எனவே, குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடிக்கு 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டிருந்த நிலையில் அது 'ரெட் அலர்ட்' என மாற்றப்பட்டுள்ளது. அதிக கனமழை பொழியும் என்பதால் நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டத்திற்கும் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் அதிகபட்சமாக 25 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது.
இந்நிலையில் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, புதுக்கோட்டை, நெல்லையிலும், அதேபோல் பெரம்பலூர், தென்காசி, விருதுநகர், தேனி, அரியலூர், திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (26/11/2021) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல் கனமழை காரணமாக ராமநாதபுரம், மதுரை, திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.