ஈரோடு மாவட்டம் முழுக்க கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம் மலைப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்கிறது. வனப்பகுதியின் தொடர்ச்சியாக உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் மிக கனமழை பெய்தது இதன் காரணமாக மலைப்பாதையில் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதன் காரணமாக மலை கிராம போக்குவரத்து துண்டிக்கப்பட்டள்ளது. கடம்பூர் மலைப்பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளது. கடம்பூர் மலைப்பகுதியிலிருந்து நிலப்பகுதியான கெம்பநாயக்கன்பாளையம் வர 15 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதையில் பயணம் செய்ய வேண்டும். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மல்லியம்மன்துர்கம், குன்றி வனப்பகுதியில் இடைவிடாமல் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் புதிதாக மலைப்பாதையில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டாறுகள் நீர்வீழ்ச்சியாக தோன்றியுள்ளன.
மலைப்பாதையில் செந்நிற மழைநீர் தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மழை நீர் வடியும் வரை காத்திருந்து பின்னர் சாலையை கடந்து சென்றனர். மலைப் பகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடம்பூர் மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் கெம்பநாயக்கன்பாளையத்தில் மலை அடிவாரத்தில் உள்ள பெரும்பள்ளம் என்ற அணைக்கு சென்று சேருகிறது.