கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தலை இல்லாமல் ஆண் சடலம் ஒன்று கிடந்த சம்பவம் பரபரப்பையும் ஒரு விதமான அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரம் பகுதியில் கட்டளை மேட்டு வாய்க்கால் என்ற வாய்க்கால் இருக்கிறது. அந்த வாய்க்காலின் நடுக்கரை பகுதியில் தலை இல்லாமல் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் சடலம் கிடந்த இடத்தில் சோதனை செய்தனர்.
குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் அந்தப் பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டார். உடனடியாக சடலமானது மீட்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுபோன்று கொடூரமான முறையில் கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக கொலை நிகழ்ந்துள்ளது என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. அப்பொழுது மோப்பநாய் சிறிது தூரத்திற்கு ஓடிச் சென்று நின்றது. அந்த பகுதியில் சம்பந்தப்பட்ட நபரின் தலை கிடைக்குமா என போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த சம்பவத்தால் அச்சத்தில் உறைந்துள்ளனர் அப்பகுதி மக்கள்.