அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளைத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.
கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் கண்டங்கள் தெரிவித்து வந்த நிலையில், த்ரிஷா இதை உறுதிப்படுத்தி உள்ளார்.
தொடர்ந்து ஏ.வி. ராஜு இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், ''என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில், சில ஊடகங்களில் திரைப்படத் துறையினரை அவதூறாக நான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான் பேசியது அரசியல் ரீதியாக மட்டும் தான் பேசினேன். அந்த இடத்தில் பேட்டியை முடித்த பின்பு ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அந்த விளக்கத்தை சொன்னேன். எந்த இடத்திலும் திரைத்துறையினரை வருத்தப்படும் அளவிற்கு பேசக் கூடியவர் நான் அல்ல.
ஒருவேளை அப்படி பேசியதாக தகவல்கள் உங்களுக்கு தவறாக கிடைத்திருந்தால், நான் உங்கள் அனைவருக்கும், பெப்சிக்கும், திரைப்பட நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவுக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை மனம் புண்படும்படி இருந்திருந்தால் என் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், முன்னாள் அதிமுக நிர்வாகியின் சர்ச்சை பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''அவர் பேசியதற்கு தான் எல்லோரும் எதிர்ப்பு கொடுத்து வருகிறார்கள். அவர் ஒரு பெரிய ஆள் இல்ல. அவர் தீபா கட்சிக்கு போயிட்டு வந்தவர். ஏதோ இரக்கப்பட்டு சேர்த்துக் கொண்டோம். உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதனால் விட்டு வைத்திருந்தோம். இப்பொழுது கட்சிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது'' என்றார்.