புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சியில் மதசார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், கீரமங்கலம் உள்கடை வீதியில் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில், "அ.தி.மு.க.வினர் மேடையில் பேசும் வசனங்களைக் கேட்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. அவர்கள் பேப்பர் படிப்பதையும், தொலைக்காட்சி பார்ப்பதையும் நிறுத்திவிட்டார்கள் போல, அதனால் தான் தி.மு.க. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று கூறுகின்றனர்.
அதுவும் தி.மு.க உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம் என்று வாக்குறுதியை நிறைவேற்றியுள்ள நிலையில், அந்த தேர்தல் மேடையில் நின்றே எப்படி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று எந்த நிதானத்தில் அவர்கள் பேசுகின்றனர் என்று தெரியவில்லை. ஐந்து ஆண்டுக்குள் தி.மு.க. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறோம். குடும்ப தலைவிகளுக்கான ரூபாய் 1,000 மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதானமாக அடியெடுத்து வைக்கிறார். கூட்டணி கட்சி எதிர்க்கட்சிகளிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கிறார். இப்படியே ஆட்சி செய்யும் போது அடுத்த ஆட்சியையும் பிடிக்கலாம்" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், "காங்கிரஸ் கட்சியின் ஜெராக்ஸ் ஆம் ஆத்மி என பிரதமர் மோடி சொல்லி இருப்பது வேடிக்கையாக உள்ளது. கோவாவில் ஆம் ஆத்மி வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தும். ஆம் ஆத்மி பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தான் நிற்கின்றனர். நாங்கள் சொல்ல வேண்டியதை அவர்கள் திரும்ப சொல்கிறார்கள். பஞ்சாப்பை பொறுத்தவரையில் மூன்று மாதத்திற்கு முன்பே பா.ஜ.க விற்கு மக்கள் பிரியாவிடை கொடுத்து விட்டனர்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பிரச்சாரத்திற்கு வரட்டும். யாரும் வர வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் உள்ளாட்சித் தேர்தலை அவர்கள் ஆட்சி காலத்தில் 2016- ஆம் ஆண்டு ஏன் நடத்தவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு, அவர் பிரச்சார களத்திற்கு வந்து வாக்குகளைக் கேட்கட்டும்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஒரு முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி. அவர் முதலில் அரசியல் சாசன சட்டத்தைப் படிக்க வேண்டும். சட்டமன்றத்தை முடக்க முடியாது ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதெல்லாம் அபத்தமான வார்த்தை, சட்டமன்றம் என்ன ஜல்லிக்கட்டு காளையா அடக்க, ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போல் சட்டமன்றத்தை முடக்க முடியாது. தமிழகத்தில் 2026- ல் தான் அடுத்த சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் அதற்கிடையே சட்டமன்றத் தேர்தல் குறித்து பேசுவது அவர்களின் அறியாமையைக் காட்டுகிறது" என்றார்.