தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
அப்போது அவர்,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து நான் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தேன். இந்த வழக்கை நீதிபதிகள் நவீன், நாரிமன் ஆகியோர் விசாரித்தனர். இன்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட தீர்ப்பை ரத்து செய்து உள்ளனர்.
இது தூத்துக்குடி மட்டுமல்ல தமிழக மக்களுக்கே கிடைத்த வெற்றி ஆகும். இன்று தான் என் வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியான நாள் ஆகும். உண்மையான தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு நான் தலைவணங்குகிறேன். நீதி வென்றது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தீர்ப்புக்கு முன் மண்டியிட்டு உள்ளது.
அ.தி.மு.க. அரசின் இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வந்தது. ஏனென்றால் ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலியாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வந்தது. ஸ்டெர்லைட் ஆலை மீது போடப்பட்ட வழக்கை அ.தி.மு.க. அரசு மூடி மறைத்தது. மேலும் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் சிந்திய ரத்தம், இந்த ஆலையை மூட வைத்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா குழுமம் வேறு எந்த கோர்ட்டுக்கு சென்றாலும் நாங்கள் விடமாட்டோம். தொடர்ந்து போராடி வெற்றி பெறுவோம். இவ்வாறு கூறினார்.