
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் சென்னை எழும்பூரில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் 'பிரிந்து கிடக்கின்ற அதிமுக ஒன்றிணைய வேண்டும்' என நபிகள் நாயகத்திடம் வேண்டுதல் வைப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். வழக்கமாக செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பன்னீர்செல்வம் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இஃப்தார் விருந்திற்கு பிறகும் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ''அதிமுக இணைவதற்குரிய ஒளிவட்டம் தெரிகிறது. உறுதியாக நடக்கும்'' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நெல்லையில் அதிமுக நிர்வாகியின் துக்க நிகழ்வில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஓபிஎஸ் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,''கோவிலாக கருதும் அதிமுக அலுவலகத்தை ரவுடிகள் மூலம் தாக்கியவர் ஒ.பன்னீர்செல்வம். எனவே அவரை பிரிந்தது பிரிந்துதான். அதிமுகவில் இருக்கத் தகுதியற்றவர் ஓபிஎஸ்'' என பதிலளித்துள்ளார்.