வேலூர் மாவட்டம் பகாயம் பகுதியில் செயல்படும் தனியார் மருத்துவக்கல்லூரி விடுதியில் சீனியர் மாணவர்கள் முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்துள்ளனர்.
முதலாமாண்டு மாணவர்களை அரை நிர்வாணத்துடன் விடுதியைச் சுற்றி வரச் செய்து ராகிங் செய்துள்ளனர். மேலும் அம்மாணவர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியும் அவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் முட்டைகளை வீசியும் சித்ரவதை செய்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாகப் பரவியது. இந்நிலையில் ராகிங் செய்த 7 மாணவர்களை அக்கல்லூரியின் ராகிங் கமிட்டியினர் சஸ்பெண்ட் செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இது குறித்து விசாரணை செய்யும் கல்லூரி நிர்வாகத்தினர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை இயக்குநர் விக்ரம் மேத்யூஸ் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெயர் குறிப்பிடப்படாமல் கடிதம் ஒன்று எங்களுக்கு வந்தது. கடிதம் தொடர்பாக விசாரணயைத் துவங்கியுள்ளோம். ராகிங் செயல்பாடுகளை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. சட்ட விதிப்படி அனைத்து நடவடிக்கைகளையும் துவங்கியுள்ளோம். விசாரணை முடிந்த பிறகு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” எனக் கூறினார்.