Skip to main content

ஹஜ் மானியத்தை ரத்து செய்யக்கூடாது! ம.ஜ.க. வேண்டுகோள்!

Published on 09/10/2017 | Edited on 09/10/2017
ஹஜ் மானியத்தை ரத்து செய்யக்கூடாது! ம.ஜ.க. வேண்டுகோள்!

மத்திய அரசு ஹஜ் மானியத்தை தொடர்ந்து நீட்டிக்கவும், முன்பு போல 21 நகரங்களிலிருந்தும் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள விமான சேவைகளை நடத்தவும் வேண்டும் என தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

மஜக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினருமான எம்.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், 

புனித ஹஜ் பயணத்தை மேற்கொண்டு வரும் பயணிகளுக்கான மானியத்தை அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்வது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்திய ஹஜ் கமிட்டி மூலம் ஒரு முறைதான் ஒருவர் ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற சீர்திருத்தங்களை அனைவரும் வரவேற்றார்கள். ஆனால், மானியத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதை ஏற்கவே முடியாது.

உச்ச நீதிமன்றம் வழிகாட்டியதன் அடிப்படையில் சிறுபான்மையினர் நல அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் ஆலோசனைகள் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்திடம் ஹஜ் மானியம் குறித்து வரலாற்று பின்னணியுடன் மத்திய அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யாமல், இதற்காக ஒரு பொம்மை குழுவை அமைத்து, அதன் ஆலோசனைகளை அறிவிப்புகளாக வெளியிடுவது ஒரு வகை நாடகமாகும்.

உச்ச நீதிமன்றம் கூறும் எல்லா விஷயங்கக்ளும் மத்திய அரசு இவ்வாறுதான் பதில் அளிக்கிறதா?

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்,  அதை ஏற்கமாட்டோம் என அறிவித்த மத்திய அரசு, ஹஜ் மானிய விஷயத்தில் மட்டும் அக்கறை காட்டுவது அதன் கபட முகத்தை காட்டுகிறது.

முன்பு கப்பல் வழியாக ஹஜ் யாத்திரை நடைப்பெற்றது. அது விமானப் போக்குவரத்தாக மாற்றப்பட்ட பிறகு அதனால் ஏற்படும் கூடுதல் செலவுகளைதான், மத்திய அரசு மானியமாக ஏற்கும் என அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இதனால் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு எந்த விதமான நட்டமும் ஏற்படவில்லை.

தற்போது 21 நகரங்களின் வழியாக சென்ற ஹஜ் விமான சேவைகளை மேலும் பல நகரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என நாடெங்கிலும் குரல் எழுப்பபட்டு வந்தது.  இந்நிலையில் தற்போது 9 நகரங்களுக்கு மட்டும்தான் என மத்திய அரசு அறிவித்திருப்பது மோசமான அணுகுமுறையாகும்.

மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு, சிறுபான்மையினருக்கு எதிராக அப்பட்டமான வெறுப்பை கையாண்டு வருகிறது என்பதற்கு இது மற்றொரு உதாரணமாகும்.

பொருளாதார ரீதியாக நாட்டை சீரமைத்து வழிநடத்த வேண்டிய நேரத்தில், அற்பத்தனமான மதவாத நடவடிக்கைகளை பிரதமர் மோடி அரசு மேற்கொள்வது அநாகரீகமானதாகும்.

 மத்திய அரசு உடனடியாக இம்முயற்சிகளை கைவிட்டு, ஹஜ் மானியத்தை தொடர்ந்து நீட்டிக்கவும், முன்பு போல 21 நகரங்களிலிருந்தும் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள விமான சேவைகளை நடத்தவும் வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்