கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி, ஊத்தங்கரை போன்ற பகுதிகளில் இன்று (09.11.2024) மதியம் திடீரென லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக போச்சம்பள்ளி அருகே உள்ள பெத்தம்பட்டி என்ற கிராமத்தில் பூமிக்கு அடியில் ஐந்து கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வின்போது அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் சில பொருட்கள் அதிர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நில அதிர்வை உணர்ந்த அப்பகுதி கிராம மக்கள் சற்று பதற்றமடைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக சென்னையில் உள்ள ஆய்வகம் மூலம் நில அதிர்வு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் நில அதிர்வு ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.