அரசுப் பேருந்தில் வெற்றிலைக் கட்டு பார்சலுக்குள் குட்கா பொருள்களை பதுக்கி வைத்து அனுப்பியவர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்தவர் மாதவன் (47). இவர், ஓசூரில் இருந்து சேலம் வழியாக கோவை செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். அவர் பணியாற்றி வரும் அரசுப் பேருந்து அக். 17ம் தேதி மதியம் ஓசூரில் இருந்து கிளம்பத் தயாரானது. காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த ஓட்டுநர் செந்தில்குமார் பேருந்தை ஓட்டிச் சென்றார். கடைசி நேரத்தில் பேருந்தை நோக்கி வந்த ஒருவர், தன்னிடம் இரண்டு வெற்றிலைக் கட்டு பார்சல் இருப்பதாகவும், அவற்றை கோவையில் கொடுத்து விடும்படியும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து வெற்றிலை பார்சலை ஏற்றிக்கொண்டு அந்தப் பேருந்து கிளம்பியது. அப்போது அந்த நபர், பேருந்தின் நடத்துநர், ஓட்டுநரின் அலைபேசி எண்களைப் பெற்றுக்கொண்டார். மேலும், ஓசூரில் இருந்து பேருந்து கிளம்பியதில் இருந்து கோவைக்குச் செல்வதற்குள் அவர்களுக்கு பலமுறை தொடர்பு கொண்டு, பேருந்து செல்லும் இடத்தை விசாரித்துக்கொண்டே இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டுநர், ஓமலூர் சுங்கச்சாவடியில் பேருந்தை நிறுத்தி, அங்கிருந்த கருப்பூர் காவல்நிலைய காவல்துறையினரிடம் இதுகுறித்து தகவல் அளித்தார்.
இதையடுத்து காவல்துறையினர் அந்த வெற்றிலைக் கட்டுகளை பிரித்து சோதனை செய்தனர். அதற்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும், வெற்றிலைக் கட்டுகளை பார்சல் ஏற்றி அனுப்பி வைத்த நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.