ஊத்தங்கரை அருகே தனியார் பேருந்தில் குட்கா போதைப் பொருள்களை கடத்தி வந்த ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கிச் செல்லும் தனியார் பேருந்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக கிருஷ்ணகிரி எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, பெங்களூரு - விழுப்புரம் வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்துகளில் சோதனை நடத்த காவல்துறையினருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார்.
ஊத்தங்கரை டி.எஸ்.பி. அலெக்சாண்டர், ஆய்வாளர் லட்சுமி, எஸ்.ஐ. சுப்ரமணி மற்றும் காவலர்கள் ஊத்தங்கரை பி.டி.ஓ. அலுவலகம் அருகில் சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தினர். பேருந்தின் மேற்கூரையில் நான்கு பெட்டிகள் இருந்தன. அவற்றைத் திறந்து சோதனை செய்தபோது 100 கிலோ குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பேருந்தையும் ஊத்தங்கரை காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
பேருந்து ஓட்டுநரிடம் விசாரித்தபோது அவர், தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கைலாபுரத்தைச் சேர்ந்த நவீன்குமார் (25) என்பதும், நடத்துநர் பெயர் சண்முகம் (52), உதவியாளர் பெயர் சிவக்குமார் (21) என்பதும் தெரியவந்தது. அவர்கள்தான் பெங்களூருவில் இருந்து குட்காவை கடத்தி வந்தனர் என்பது தெரியவந்ததை அடுத்து மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.