சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் அபாகஸ் அடிப்படையிலான மன எண்கணித வகுத்தல் போட்டியில் புதிய உலகசாதனை படைத்துள்ளார்.
சென்னை, முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த நரேந்திர குமார், ஸ்ரீதேவி தம்பதியரின் மகனான குரு தீபக் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஆறாம் வகுப்பு படிப்பதிலிருந்தே அபாகஸ் எண்கணித பயிற்சியை மேற்கொண்டு வரும் இவர், எண்கணிதவியல் தொடர்பான பல்வேறு போட்டிகளில் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பங்கேற்று வருகிறார். அந்தவகையில், மிகக்குறைந்த நேரத்தில் கணக்கீட்டுக் கருவிகள் எதனையும் பயன்படுத்தாமல் அதிக எண்ணிக்கையிலான வகுத்தல் கணக்குகளுக்குத் தீர்வு காணும் உலகசாதனை முயற்சியில் அவர் அண்மையில் பங்கேற்றார்.
கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி நடைபெற்ற இதற்கான முயற்சியில் கலந்துகொண்ட மாணவர் குரு தீபக், ஆடவருக்கான தனிநபர் பிரிவில் ஐந்து நிமிடங்களில் 63 மூன்றிலக்க எண்களின் வகுத்தலுக்குச் சரியான தீர்வுகளைக் கண்டறிந்தார். இதுவே இப்பிரிவில் ஒருவர் தீர்வு கண்டறிந்த அதிகபட்ச கணக்குகளின் எண்ணிக்கை ஆகும். இதன் அடிப்படையில், எலைட் உலக சாதனை புத்தகத்திலும், இந்தியா ரெக்கார்டஸ் அகாடெமி சாதனை புத்தகத்திலும் மாணவர் குரு தீபக் இடம்பிடித்துள்ளார்.
இது குறித்து சிறுவனின் தந்தை நம்மிடம் கூறுகையில், ''அபாகஸில் உள்ள எட்டு ஸ்டேஜ்களையும் என் மகன் முடித்துள்ளார். இதற்காக அவரது அகாடெமிக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம். குரு தீபக்கின் இந்த சாதனைக்கு அவரது அம்மா ஒரு முக்கிய காரணம். அவர்தான் அவனிடம் இருந்த இந்த திறமையைக் கண்டறிந்தார். இதற்கு முன்னர் குருதீபக், தென்இந்திய அளவில் நிறைய பதக்கங்களை வென்றுள்ளார். அடுத்து ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வைக்க முயற்சி எடுத்து வருகிறோம்'' என்றார்.