சாலை பாதுகாப்பு வார விழாவின் இறுதிநாள் நிகழ்ச்சியை கலைநிகழ்ச்சியும்,பாரம்பரிய உணவு வகைகளும் கலந்த பிரம்மாண்ட நிகழ்வாக நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர் பந்தநல்லூர் காவல்துறையினர்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவிற்கு உட்பட்ட பந்தநல்லூர் காவல் சரகத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவின் கடைசி நிகழ்வு பந்தநல்லூர் கடைவீதியில் நடந்தது. பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி கடைவீதி வரை அரை கிலோ மீட்டர் கிராமிய பாடல்கள், கரகாட்டம் என கலைநிகழ்ச்சியோடு வந்தது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரத்தை பந்தநல்லூர் ஆய்வாளர் சுகுணா வழங்கிவந்தார், பேரணியில் மாணவர்கள், பொதுமக்கள், வணிகர்கள் புடைசூழவந்தனர்.
துண்டுபிரசுரத்தில் " தலைக்கவசம் உயிர்க்கவசம், தலைக்கவசம் அணிவீர் உயிரிழப்பைத் தவிர்ப்பீர், அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர், இருசக்கர வாகனம் இருவர் செல்ல மட்டுமே, அதிக பாரம் ஆபத்தில் முடியும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடு, மருத்துவமனை பள்ளி மற்றும் கல்லூரி அருகில் ஒலி எழுப்பாதே," என்பன உள்ளிட்ட 20 சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வரிகளை பட்டியலிட்டு இருந்தனர்.
நிகழ்ச்சியை பந்தநல்லூர் காவல்துறை ஆய்வாளர் சுகுணா ஏற்பாடு செய்திருந்தார், நிகழ்ச்சிக்கு திருவிடைமருதூர் வட்டத்திற்குட்பட்ட திருவிடைமருதூர், நாச்சியார்கோவில், திருப்பனந்தாள், உள்ளிட்ட காவல்துறை ஆய்வாளர்களும் காவலர்களும் கலந்துகொண்டு சாலை விதிகள் குறித்து பேசினர்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கரகாட்டத்துடன் கூடிய கிராமிய பாடல்களும், விழிப்புணர்வு குறித்தான ஆடல் பாடல்களும் முழங்கின. பாரம்பரிய முறையில் செய்யப்பட்டுள்ள உணவு வகைகளை மாணவர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என குழுமியிருந்த அனைவருக்கும் வழங்கி அசத்தினர்.
வழக்கமாக சாலை பாதுகாப்பு விழா என்பதை சம்பிரதாய விழாவாக நினைத்து பத்து பைக்கில் வந்து நோட்டீஸ் கொடுத்துவிட்டு செல்லுவதே வாடிக்கையாக பார்த்துவரும் நிலையில், வாகனம் ஓட்டும்போது உயிரை பாதுகாக்க என்னென்ன செய்யவேண்டுமோ, அதே போல் உடல்நலத்தை பாதுகாக்க ரசாயனத்தை தவிர்த்து பாரம்பரிய உணவும் அவசியம் என்பதுபோலவும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது மிக அருமை என பலரும் பேசியதை காணமுடிந்தது.