உச்சநீதிமன்றத்தில் மேகதாது அணைக்கு அதிமுக அரசு ஒப்புதல் அளித்திருப்பது மிகப் பெரிய துரோகம்! துரைமுருகன் கண்டனம்!
உச்ச நீதிமன்றத்தில் மேகதாது அணைக்கு அ.தி.மு.க. அரசு ஒப்புதல் அளித்திருப்பது தமிழ்நாட்டுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் என்று தி.மு.க. முதன்மைச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் கண்டனம் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“காவேரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அருகே ஓர் அணையை கட்டலாமா? அப்படி கட்டப்பட்ட அணையின் மிகை நீரை தேக்கி வைத்து தமிழ்நாட்டுக்கும் தரலாமே?”
என்றோர் யோசனையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தபோது, தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சேகர் நாப்டே,
“தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்குவதில் தடையில்லை என்றால், கர்நாடக காவேரியில் புதிய அணை கட்ட எந்த எதிர்ப்பும் இல்லை” என்று கூறியதாக ‘தினமணி’ நாளிதழ் செய்தி தெரிவித்திருக்கிறது.

இவை ஏதும் நடைபெறாமல், தமிழக அரசு சார்பில்
வாதாடிய வழக்கறிஞர் மேகதாது அணைக் கட்ட தமிழக அரசு சார்பில் ஒப்புக்கொண்டது தமிழகத்துக்கு செய்த மாபெரும் துரோகம்.
இப்படி ஒரு செய்தி வந்த பிறகும், இதுவரை பொதுப்பணித் துறையை வைத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி வாய் திறக்காதது ஆச்சரியம்.
‘மேகதாது’வில் அணைக் கட்டினால், அந்த அணையை பராமரிக்கும் அதிகாரம் கர்நாடகத்திற்கு இருக்காது. இரு மாநிலத்திற்கும் பொதுவான நிர்வாகத்திடம் பொறுப்பு இருக்கும். இதனால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இருக்காது என்று உச்ச நீதிமன்றமே உறுதி தருகிறபோது, நாம் ஏன் பயப்பட வேண்டும்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறலாம்.
அப்படி உச்ச நீதிமன்றம் கூறியபோது, தமிழ்நாட்டின் சார்பில் என்ன சொல்லியிருக்க வேண்டும்?
அய்யா! ஏற்கனவே, காவேரி நடுவர்மன்றம் இறுதித் தீர்ப்பு கொடுத்த பின் அந்த தீர்ப்பை நிறைவேற்ற இதுவரை காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்று நாங்கள் இதே உச்ச நீதிமன்றத்தில்தான் முறையிட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கோர் தீர்வு சொல்லுங்கள். அந்த மேலாண்மை வாரியம் எப்படி நியாயமாக செய்லபடுகிறது என்று பார்ப்போம். அந்த மேலாண்மை வாரியத்துக்கு கர்நாடக எப்படி கீழ்படிந்து நடக்கிறது என்று பார்ப்போம். பிறகு, இந்த கோரிக்கையைப் பற்றி பேசலாம்” என்றுதானே கூறியிருக்க வேண்டும்.
காவேரியின் குறுக்கே மேகதாது அணையை கர்நாடகா அரசு கட்டுமாம். தண்ணீரை தேக்கி வைத்து, தமிழ்நாட்டுக்குத் தேவையான போது திறந்து விடுமாம். இதை நாம் நம்ப வேண்டுமாம். இதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் தருமாம். என்ன வேடிக்கை? எவ்வளவு பெரிய துரோகம்?
மேகதாது, ராசிமணல், ஓகனேக்கல் ஆகிய இந்தத் திட்டங்கள் குறித்து, நீண்ட நாட்களாக பேசிப்பேசி அலுத்துப் போய்விட்டது. காரணம், இந்த திட்டங்கள் நிறைவேறும்போது, மிக மிக ஜாக்கிரதையாக ஒப்பந்தம் போட வேண்டும். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பார்களே, அப்படி ஒரு நிலை தமிழ்நாட்டுக்கு வந்துவிடும்.
மேகதாது அணைக் கட்டப்படுவதால்,
1. தமிழ்நாடு நீர் பாசனத்திற்கு தேவையான நீரானது மோசமான முறையில் பாதிக்கப்படும்.
2. மேட்டூர் குகை - மேட்டூர் அணை - கீழ்மேட்டூர் அணை, 1 முதல் 4 வரை ஆகிய புனல் மின் நிலையங்கள் பாதிக்கப்படும்.
3. மேகதாது அணை கர்நாடகா பகுதியில் இருப்பதால், அதிலிருந்து வரும் நீரோட்டத்தை தமிழ்நாடு எவ்வகையிலும் உறுதிபடுத்த இயலாது.
4. மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகத்தின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்த, இந்த அணையிலிருந்து நேரிடையாக நீர் பெறும் வாய்ப்பு உள்ளது. இதை தமிழ்நாடு எவ்வகையிலும் தவிர்க்க இயலாது.
5. பெங்களூர் குடிநீருக்காக, காவேரியிலிருந்து 28 டி.எம்.சி. நீரை பயன்படுத்த, கர்நாடகா மின் கழகம் அறிக்கை அளிக்கிறது. பருவநிலை அல்லாத காலங்களில் மேகதாது அணையிலிருந்து 16.1 டி.எம்.சி. நீரை பயன்படுத்துவார்கள்.
இப்படி பல இடர்பாடுகள் மேகதாது அணையில் உள்ளது.
மேகதாது - ராசிமணல் - ஒகனேக்கல் - சிவசமுத்திரம் குறித்து தமிழ்நாடு கொடுத்த பல திட்டங்களுக்கு கர்நாடக அரசு ஒத்துக் கொண்டது. இப்படி பல பிரச்சினைகளை ஆராய வேண்டிய நிலையில், திடீரென மேகதாது அணைக்கு, தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்திருப்பது, தமிழ்நாட்டுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்.
தஞ்சை ‘சகாரா’வாகும். காவேரி டெல்டா பகுதி காய்ந்து போன காடாகும்.
அ.தி.மு.க. அரசின் இந்த செயலை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!