மா.கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது பதிவான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். புதிதாக யாரையும் கைது செய்யக்கூடாது. கோவையில் நடந்த நிகழ்ச்சிக்காக தனியார் தொலைக்காட்சி நிறுவனம், இயக்குனர் அமீர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்திருப்பது கருத்து சுதந்திரத்தை பறிப்பதாகும். அந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
இதேபோல் மாநில அரசுக்கு எதிராக குரல் எழுப்பினாலோ, அறிக்கை வெளியிட்டாலோ, அரசாங்கத்தை கண்டித்து பேசினாலோ கைது செய்வது, வழக்கு பதிவு செய்வது போன்ற கருத்து சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு கைவிட வேண்டும். மக்களின் கருத்துகளை கேட்காமல் நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. அரசு பள்ளிகளை மூடாமல் அதனை தொடர்ந்து நடத்துவதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட வேண்டும். இவ்வாறு கூறினார்.