திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினரும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி ஆத்தூர் தொகுதி பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று தீர்வு வழங்கியதோடு, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு நலத்திட்டப் பணிகளைத் தொடங்க உத்தரவிட்டார்.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சி சட்டையப்பனூரைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகள் சர்மிளா, முத்து நாயக்கன்பட்டி அரசுப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து அதன்பின்பு நீட் தேர்வு எழுதித் தேர்வு பெற்றார். மாணவி சர்மிளாவுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. மாணவி மருத்துவக் கல்லூரிக்கு தேர்வு பெற்றது தெரிந்தவுடன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தனது இல்லத்திற்கு நேரில் வரவழைத்து மாணவிக்கு நிதியுதவி வழங்கி வாழ்த்தினார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, “திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் கழகத்தலைவர் மு.க. ஸ்டாலின் நல்லாட்சியில் தமிழகம் முன்னேற்றப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தரமான கல்வி வழங்குவதால் கிராமப்புற மாணவிகளும் மருத்துவப்படிப்பில் சேரும் நிலைமை உருவாகி வருகிறது” என்று கூறினார்.
இதில் திருச்சி மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கங்காதரணி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், கிழக்கு மாவட்டப் பொருளாளர் சத்தியமூர்த்தி, ஒன்றியச் செயலாளர்கள் திண்டுக்கல் நெடுஞ்செழியன், மாநகராட்சி ஏழாவது வார்டு கவுன்சிலர் சுபாஷ் உட்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.