கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இதில் இடைநிலை ஆசிரியராக செல்வம் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 18 மாதங்களாக பக்கவாதத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர் மருத்துவ விடுமுறை அல்லது மற்ற எந்த விடுமுறையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இவர் மாதம் ரூ. 90 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் அதே பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியராக உள்ள ரமேஷ் மற்றும் தலைமை ஆசிரியர் இளங்கோவன் ஆகிய இருவரும் அவரிடம் சம்பளத்தில் மாதம் கணிசமான தொகையை கமிஷன் பெற்றுக்கொண்டு இவருக்கு பதிலாக ஆசிரியர் ரமேஷ் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆசிரியர் செல்வம் இல்லாததால் அவருக்கு பதில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புக்கு பாடம் எடுக்க தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ரமேஷ் ஏற்பாட்டின் பேரில் ஆசிரியர் ரமேஷின் மருமகள் பிரகதீஸ்வரி என்ற பெண் ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 மாதம் மட்டுமே பணியில் இருந்துள்ளார். இவருக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியர் செல்வத்திடம் பணத்தைப் பெற்று ஊதியம் வழங்கியுள்ளனர். இதுகுறித்த புகார் மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவர் விசாரணை மேற்கொண்ட போது கடந்த ஒரு வாரமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆசிரியர் செல்வம் பள்ளி வகுப்பறையில் பெயருக்காக வந்து உட்கார்ந்து விட்டு செல்கிறார் என்று பள்ளி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளியில் ஆசிரியர் பணிக்கு வராமல் மற்ற ஆசிரியர்கள் கையெழுத்து போட்டு கமிஷன் வாங்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலர் சங்கர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.