ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது கடலூர் அருகே உள்ள பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த கதிர்காமன் என்பவரது மனைவி ரேவதி தனது இரு குழந்தைகளுடன் வந்து கண்ணீர் விட்டு அழுதபடியே ஒரு மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்தார்.
அதில், “எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. நான் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றுவதற்கு மிகவும் சிரமப்படுகிறேன். ஓரளவு படித்துள்ள எனக்கு ரேஷன் கடை விற்பனையாளர் பணி கேட்டு ஐந்து ஆண்டுகளாகக் கூட்டுறவுத்துறையில் மனு கொடுத்து அலைந்து வருகிறேன். எந்த அதிகாரியும் என் நிலைமையை கண்டுகொள்ளவில்லை.
எனவே தாங்கள் எனக்கு ரேஷன் கடை விற்பனையாளர் பணி வழங்கி என் பிள்ளைகளையும் என்னையும் காப்பாற்றுவதற்கு உதவ வேண்டும். வேலை கிடைக்காவிட்டால் நானும் எனது பிள்ளைகளும் தயாராக வைத்துள்ள விஷம் அருந்தி மூவரும் இறப்பதைத் தவிர வேறு வழியில்லை” என ரேவதி குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் மற்றும் பொது விநியோகத் திட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோரிடம் ரேவதியின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதில் பரிந்துரை செய்து கொடுத்துள்ளார்.
மனு கொடுத்த ரேவதியிடம் உனது மனுவை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளேன். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் நீங்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கைவிட்டு பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.