திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ளத் துப்பாக்கி தொழிற்சாலையிலிருந்து திருச்சி மத்திய பேருந்துநிலையம் வந்த நகரப் பேருந்தில் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பயணிகள் பயணித்து வந்தனர். அப்போது பேருந்தில் பயணித்த இருவர் பயணிகளின் பணம் உள்ளிட்ட பொருட்களைத் திருடியதாகத் தெரியவந்தது. இதையடுத்து பேருந்தில் பயணித்த பெண்கள் உடனடியாக பேருந்தைக் காவல் நிலையத்திற்கு விடுமாறு நடத்துநரிடம் கூறினர். ஆனால் பேருந்தைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லாமல், மத்திய பேருந்து நிலையத்தை நோக்கி வந்தது.
அப்போது பயணிகளிடம் பணம் திருடிய இளைஞர்கள் இருவரும் பேருந்திலிருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பேருந்தை ஓட்டி வந்த அரசுப் பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் பேருந்தை விட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். ஆனால் பெண்கள் உள்ளிட்ட பயணிகள் கொள்ளையர்களைத் தப்ப விட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேருந்தைச் சிறைபிடித்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் அங்கு வந்த கண்டோன்மெண்ட் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி வழங்கியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.