கடந்த அதிமுக ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்திற்கு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதன்பின் நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஆன்லைன் சூதாட்ட விளைவுகளை ஆராய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஜூன் மாதம் அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் செப்டம்பர் 26-இல் தமிழக அமைச்சரவை ஆன்லைன் சூதாட்டத்திற்கான அவசர தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து, ஆளுநரும் ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
இச்சட்டம் நேற்றுடன் 60 நாட்கள் முடிந்து காலாவதியானது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட நிரந்தர சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காததால் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களுக்கு தடையில்லாத சூழல் நிலவுகிறது.