இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் தற்போது துவங்கியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு தமிழில் தனது உரையைத் தொடங்கினார். முன்னதாக ஆளுநர் ரவிக்கு சட்டமன்ற வளாகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சட்டப்பேரவை வளாகத்தில் அவர் உரையாற்றுவதற்கான மேடையில் ஏறி தமிழில் தனது உரையைத் தொடங்கினார். உரையில் அரசு தயாரித்த உரையை முழுமையாகப் படிக்காமல் சில வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக 'திராவிட மாடல்' என்ற வார்த்தை ஆளுநரால் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் 'தமிழ்நாடு கவர்ட்மென்ட்' என்ற வார்த்தைக்குப் பதில் 'திஸ் கவர்ட்மென்ட்' என மாற்றியுள்ளார். மேலும் பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் பெயரும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் பேரவையில் இருந்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளியேறின. தொடர்ந்து தமிழக முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போதே சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''ஆளுநரின் செயல்பாடுகளில் எங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் ஆளுநர் உரையைத் துவங்குவதற்கு முன்பு எந்த விதமான எதிர்ப்பையும் தெரிவிக்காமல் அமைதி காத்து ஜனநாயக ரீதியில் ஆளுநருக்கு உரிய மரியாதையை நாங்கள் அரசின் சார்பாக அளித்தோம். பேரவையில் மிகுந்த கண்ணியத்தோடு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் ஆளுங்கட்சியைச் சார்ந்திருக்கக் கூடிய முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், உறுப்பினர்கள் என அத்தனை பேரும் அந்த முறையைப் பின்பற்றி அமர்ந்திருந்தார்கள். ஆனால் ஆளுநர், பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு மாறாக, குறிப்பாகச் சட்ட விதிகளுக்கு மாறாக அவற்றை மீறக்கூடிய வகையில் முரணான வகையில் உரையினை வாசித்திருக்கிறார் என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. இந்த உரைக்கான வரைவு ஏற்கனவே ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அதற்கான ஒப்புதலை அவர் அளித்திருக்கிறார். நான் குறிப்பிட்டுச் செல்ல வேண்டும் என்று சொன்னால் கடந்த ஐந்தாம் தேதியே முதலமைச்சருடைய ஒப்புதலைப் பெற்று அவருடைய வரைவு முறையாக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
கடந்த 7ம் தேதியே அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இன்று 9ம் தேதி சட்டப்பேரவைக்கு வந்திருக்கிறார். இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இப்படி இருக்கும்போது முழுமையான ஒப்புதல் அளிக்கப்பட்ட அந்த உரைக்குப் பிறகும் இன்றைக்கு அவர் படித்திருக்கக் கூடிய உரை என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலங்களில் ஒன்று, மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்று நவீன தமிழ்நாடு. இதனை உருவாக்கிய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், பெருந்தலைவர் காமராஜர், இந்த நாட்டில் சமத்துவத்திற்காகப் போராடிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பெயரைக் கூட சொல்ல மறுத்து ஆளுநர் சென்றிருக்கிறார். இன்று அரசின் கொள்கைகளாக எடுத்துரைக்கப்பட்ட விஷயங்கள் சமூகநீதி, சமத்துவம், பெண் அடிமை ஒழிப்பு, மத நல்லிணக்கம் உள்ளடங்கிய வளர்ச்சி இவை எல்லாம் உள்ளடக்கிய வார்த்தைகளை எல்லாம் ஆளுநர் இன்றைக்குத் தவிர்த்திருக்கிறார்.
அவராக சில விஷயங்களைத் தவிர்த்ததோடு மட்டுமல்லாமல் அவராகவே சில விஷயங்களை சேர்த்துக் கூறியதும் ஏற்புடையதல்ல. இன்னும் சொல்லப்போனால் ஆளுநர் தேசிய கீதத்திற்கு கூட உரிய மரியாதை தராமல் முதல்வர் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவர் வெளியே சென்றிருப்பது தேசிய கீதத்திற்கு அவர் கொடுத்த அவமதிப்பாக நாங்கள் கருதுகிறோம். அதிமுகவும் தேசிய கீதத்தை மதிக்காமல் சென்றுள்ளது'' என்றார்.