கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டது. இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு முதலில் கைது செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அஹமத் தாஹா ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (21.05.2024) இரு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். கர்நாடகாவில் இருந்து வந்த தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கோவையைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் ஜாபர் இக்பால், நயன் சாதிக் ஆகியோர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்தs சோதனை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இந்தச் சோதனையின் போது இருசெல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இரு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.