Skip to main content

"தெலுங்கானா மற்றும் புதுச்சேரியை இரட்டை குழந்தைகளாகத்தான் பார்க்கிறேன்" - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

governor tamilisai soundararajan pressmeet at chidambaram

 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்த நிலையில் அவர் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் (20/02/2021) இரவு வந்தார். அப்போது அவரை சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் மற்றும் வட்டாட்சியர் ஆனந்த் ஆகியோர் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.

 

இதனைத் தொடர்ந்து கோவில் தீட்சிதர்கள் கும்ப மரியாதை அளித்து அவரை கோவிலுக்கு அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர்.  அதைத் தொடர்ந்து, சாமி தரிசனம் செய்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; "புதுச்சேரியில் என்ன குறைபாடுகள் உள்ளன என்பதைக் கண்டறிந்து புதுச்சேரி மாநிலத்தை மேம்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்வேன். அதே நேரத்தில் சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து அரசியல் பணிகளையும் செய்ய உள்ளேன். புதுச்சேரியில் மாணவர்களுக்கு வாரத்திற்கு தற்போது ஒரு முட்டை வழங்கப்படுகிறது. நான் மருத்துவர் என்பதால், அது அவர்களுக்குப் போதாது என்பதைக் கருதி 3 முட்டைகள் வழங்குவதற்கு கோப்புகளைத் தயார் செய்யும் பணிக்கு உத்தரவிட்டுள்ளேன்.

governor tamilisai soundararajan pressmeet at chidambaram

 

மேலும் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில கவர்னராக உள்ள நான் இரண்டு மாநிலத்தையும் இரட்டை குழந்தைகளாகத்தான் பார்க்கிறேன்" என்றார். இந்த நிகழ்வின்போது, பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் கே.பி.டி.செழியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

இதனைத் தொடர்ந்து தில்லை அம்மன் கோவிலில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். வழக்கமாக தில்லை அம்மன் கோவிலில் ஒவ்வொரு நாளும் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும். இந்த நிலையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வருகையையொட்டி, காவல்துறையினர் கோவில் நிர்வாகிகளிடம் கூறி 09.00 மணி வரை கதவை சாத்தாமல் இருந்தனர். இந்த நிலையில் இரவு 09.00 மணிக்கு கோவிலுக்கு வந்த ஆளுநர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

 

சார்ந்த செய்திகள்