மயிலாடுதுறையில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (17ம் தேதி) காலை விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். முதலில், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படக்கூடிய, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தனது மனைவியுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சென்றார். அவருக்கு கோயில் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
மூலவர் மற்றும் தாயாரை தரிசனம் செய்த ஆளுநர் ஆர்.என். ரவி, தனது மனைவியுடன், தாயார் சன்னதி முன்பு, "ஸ்வட்ச் தீர்த்" எனப்படும் புனித ஸ்தல தூய்மை பணியில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து, தமிழக ஆளுநர் ரவி செய்தியாளர்களிடம் கூறியபோது, "அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட இருப்பது, நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதற்கு காரணம், ராமர் இந்தியர் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார். கோயில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோயில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல, பக்தர்களுக்கும் பெரும்பங்கு உண்டு. தூய்மைப் பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். வீடுகள், கோயில்கள் மட்டுமல்ல, நாம் பொது இடங்களிலும் தூய்மை பேண வேண்டும்" என்றார்.