வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவிக்கையில், “டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரக்ஷா பந்தன், ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பரிசாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படும். சகோதரிகளுக்கு பிரதமர் மோடி வழங்கும் பரிசுதான் இந்த சிலிண்டர் விலை குறைப்பு. ஏற்கனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த விலை குறைப்பையும் சேர்த்து 400 ரூபாயை குறைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது” என தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த விலை குறைப்பு வர்த்தக ரீதியில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்துபவர்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு இன்று (30.08.2023) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை குறைப்பின் மூலம் நாடு முழுவதும் 31 கோடி பயனாளர்கள் பயனடைவர் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி?. சமையல் காஸ் விலையை ரூ. 200 குறைத்திருப்பதே அறிகுறி. ரூ. 1100 க்கு மேல் விலை வைத்து மக்களைக் கசக்கிப் பிழிந்த அரசு திடீரென்று விழித்துக் கொள்கிறது பாரீர். வெள்ளித்திரையில் விரைவில் காண்க பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு” என தெரிவித்துள்ளார்.