விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள சிட்டாம் பூண்டி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 140 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளிக்கு 5 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதில் தலைமையாசிரியர், கணித ஆசிரியர் ஆகிய இரண்டு பணியிடங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு போதிய கல்வி அளிக்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு கிராம மக்கள் சார்பாக புகார் மனுக்கள் அனுப்பியும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதைக் கண்டித்து இன்று காலை பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் பெற்றோர்கள் புறக்கணிப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். தகவல் அறிந்த காவல்துறை மற்றும் கல்வி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிள்ளைகளின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் எனக் கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.