மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் இன்று (28/07/2022) தொடங்குகின்றன. ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், நடைபெறவிருக்கும் தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக அஸ்ஸாம், மணிப்பூர், உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பெண்கள் வந்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, பூஞ்சேரி மட்டுமின்றி சென்னை முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், வைரமுத்து, கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்கும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டையில் மேடைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தொடங்கிய அணிவகுப்பில் போட்டியிடும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதில் தங்கள் நாட்டுத் தேசியக் கொடிகளை ஏந்தி சென்ற வீரர்களை முன்னின்று தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் வழிநடத்திச் சென்றனர். இதற்காக மாவட்ட அளவில் நடத்தப்பட்ட செஸ் போட்டிகள் மூலம் 186 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக இந்த அணிவகுப்பில் வழிநடத்தும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.