புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் எல்.கே.ஜி. வகுப்புகளுக்காக பெருங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியை தேர்வு செய்தனர். அதே போல மாவட்டம் முழுவதும் சுமார் 85 அரசு பள்ளிகள் எல்.கே.ஜி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் சுமார் 1200 குழந்தைகளை பெற்றோர் அரசு பள்ளிகளில் உள்ள எல்.கே.ஜியில் சேர்த்துள்ளனர். இதில் பெருங்களூர் முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மட்டும் சுமார் 10 கிராமங்களில் இருந்து 120 குழந்தைகளை சேர்த்து ஆசிரியர்களையும், அதிகாரிகளையும் திணறவைத்துவிட்டனர் பெற்றோர்கள். இதற்கு அந்த பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் சங்கம் மற்றும் ஆர்வமுள்ள பெற்றோர்கள் தான் காரணம் என்கிறார்கள் பெற்றோர்களே.
அதாவது அரசு பெருங்களூர் மேல்நிலைப் பள்ளியை முன்மாதிரி பள்ளியாக அறிவித்து அதற்காண நிதி ஒதுக்கீடு செய்தாலும் வகுப்பறைகள் கட்டப்படவில்லை. இருப்பினும் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் 4 வகுப்பறைகளை தனியாக ஒதுக்கி வண்ணம் தீட்டி அந்த வகுப்பறைகளுக்குள் சின்னக் குழந்தைகளை கவரும் வண்ணத்தில் விளையாட்டுப் பொருட்களை வாங்கி வைத்ததுடன் அந்த வகுப்புகளில் மட்டுமின்றி வெளியிலும் 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினார். அதே போல மாணவர்களை கவரும் சித்திரங்களும், அவர்களுக்கென ஒளிப்படக் காட்சிகளும் தயாரானது.
இத்தனையும் செய்து முடித்த பிறகு பெருங்களூர் சுற்றியுள்ள கூப்பாச்சிப்பட்ட்டி, வாராப்பூர், மணவிடுதி, மங்களத்துப்பட்டி, மாட்டப்பட்டி, பொக்கிசக்காரன்பட்டி இப்படி 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெற்றோர்களை சந்தித்து சிறப்புகளை கூறியதுடன் பெற்றோர்களையும் அழைத்து வந்து பள்ளியை காட்டினார். வந்து பார்த்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க ஒத்துக் கொண்டனர். ஆனால் சின்னக் குழந்தைகள் கூடுதல் பாதுகாப்பு வசதி என்ன செய்யப் போறீங்க என்று பெற்றோர்கள் கேட்ட பிறகு உதித்தது தான் மாணவர்களின் பாதுகாப்புக்காக அவர்களின் சட்டையில் ஒட்டும் அலார்ட் அலாரம். அதாவது மாணவனின் சட்டையில் அந்த கருவியை ஒட்டிவிட்டால் அந்த மாணவன் 20 மீட்டர் தாண்டினால் அதன் மெயின் கருவியில் அலாரம் அடிக்கும் பெற்றோருக்கு குறுஞ்செய்தி போகும். அந்த கருவி பொருத்தப்படும் என்று சொன்னதுடன் முதல்கட்டமாக 3 கருவிகளை வைத்து சோதனையும் செய்து காட்டப்பட்ட பிறகு பெற்றோர்கள் பயமின்றி மாணவர்களை சேர்க்கத் தொடங்கிவிட்டார்கள். ஒரு கருவியின் விலை ரூ. 800 விரைவில் பல கருவிகள் வாங்கி வந்து மாணவர்களுக்கு பொருத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் பொக்கிசக்காரன்பட்டி கிராமத்தில் இருந்து தூரம் அதிகம் என்பதால் 15 குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆசைப்பட்டாலும் தூரம் ஒரு தடையாக உள்ளது அதே போல கட்டிட வசதிகளும் குறைவாக உள்ளது. முதல்கட்டமாக ஒரே நாளில் 120 குழந்தைகள் சேர்க்கப்பட்டதும் குழந்தைகளை பார்த்துக்கொள்ள 3 பேர் நியமிக்கப்பட்டனர். அரசு போதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதை பொருத்தே அடுத்த ஆண்டின் சேர்க்கை இருக்கும். தொடக்க நாளில் 120 குழந்தைகள் சேர்க்கை அடுத்தடுத்த நாட்களில் 100 குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனாலும் வாகன வசதியும் தூரமும் தடையாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பெருங்களூர் முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பினை தொடங்கி வைத்துப் பேசிய முதன்மைக் கல்வி அலுவர் வனஜா, "புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதால் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை தவிர்த்து அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்ற ஆண்டுகளில் எல்லாம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கல்வி ஆண்டு தொடக்கத்தில் ஜீன் மாதம் மேற்கொள்வதே வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதியே நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம். அதைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்புகள் தொடங்கி பிளஸ் 2 வரை மாணவர்கள் சேர்க்கை நடந்து வந்ததால் இன்று மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை ஒன்றியம் பெருங்களூர் முன் மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி பிரிவில் 120 மாணவர்களை சேர்த்துள்ளனர் என்பது பெருமையாக உள்ளது. இன்னும் 50 க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிகழ்வை பார்க்க மகிழ்வாக உள்ளது. எனவே பெருங்களூர் அரசு முன் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளை சேர்த்த பெற்றோர்களுக்கும், மாணவர்கள் சேர்க்கை உயர காரணமான இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்" என்றார்.
தொடர்ந்து மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், பள்ளி தலைமையாசிரியர் பெ.ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் தயாராகிவிட்டனர். அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின் விருப்பம். அரசுப் பள்ளிகளை கனவுப்பள்ளிகளாக்க முன்னாள் மாணவர்களின் சேவையும் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது.