கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ளது பைத்தன்துறை கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களைக் கொண்டு பள்ளியைச் சுத்தம் செய்து வருவதாகவும் மாணவர்களைக் கொண்டு குப்பை அல்ல செய்வதாகவும் அதே கிராமத்தைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர் பள்ளியில் உள்ள ஆசிரியரிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
துப்புரவு பணியாளர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுவர்களைக் கொண்டு சுத்தம் செய்தால் இன்னும் நன்றாக சுத்தம் செய்யலாமே எனச்சொல்லி உள்ளார். இது பற்றி அதிகாரிகளுடன் புகார் தெரிவிப்பேன் இனி எப்படி நடக்கக் கூடாது எனக் கூறிச்சென்றுள்ளார்
இந்த நிலையில், மாணவர்களை எப்படி சுத்தம் செய்ய வைப்பீர்கள் என நீ எப்படி கேட்கலாம் எனப் பைத்தம்துறை ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முத்துசாமி மற்றும் அவரது சகோதரர் ஊர் காவல் படையைச் சேர்ந்த சண்முகம் ஆகிய இருவர் பைத்தன்துறை பேருந்து நிறுத்தத்தில் மளிகை கடை மற்றும் வீடு வைத்துள்ள தீனதயாளனின் இடத்திற்கு சென்று தகாத வார்த்தையில் திட்டி மிரட்டி உள்ளனர்.
அப்போது கடையிலிருந்து வெளியே வந்த தீனதயாளன், அவர்களிடம், “நான் எனது கருத்தை மட்டுமே கூறினேன்..” எனப் பேசிக் கொண்டிருந்தபோது, ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முத்துசாமி என்பவர் தீனதயாளனைக் காலணியால் அடித்து அவரைக் கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார். மேலும் அவரது சகோதரர் ஊர் காவல் படையைச் சேர்ந்த சண்முகம் என்பவரும் தீனதயாளனை தாக்கியுள்ளார்.
பள்ளி மாணவிகளுக்காக கேள்வி எழுப்பியவரை தாக்கியவர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. தன்னைத் தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முத்துசாமி மீதும், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சின்ன சேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மாணவர்களைச் சுத்தம் செய்ய வைக்க வேண்டாம் எனக் கருத்து கூறிய நபரை ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.