கட்டிடங்களில் உப்பு தண்ணீர் படும்போது அரிப்பு ஏற்பட்டு கட்டிடம் வலுவழந்துவிடுகிறது. ஆனால் ஒரு ஊரில் உப்புத்தண்ணீரை பயன்படுத்தி அரசுப் பள்ளி கட்டிடமே முழுமையாக கட்டி வருவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு எழுப்புகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியத்தில் உள்ளது பொன்பேத்தி கிராமம். அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகம் கட்டடம் கட்ட சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில் 6 மாதங்களுக்கு முன்பு பூமிபூஜை போடப்பட்டு தற்போது கட்டுமானப் பணிகள் நடந்துவருகிறது.
தண்ணீர் தேவைக்காக அதேபகுதியில் ஒரு ஆழ்குழாய் கிணறும் அமைத்தார்கள். அதிலிருந்து பயன்படுத்த முடியாத உப்புத் தன்மை அதிகம் கொண்ட தண்ணீர் வருகிறது. இந்தநிலையில் புதிய கட்டிடப்பணிக்கு அந்த உப்புத்தண்ணீரையே பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் நடப்பதை அறிந்த அக்கிராம மக்கள் கட்டிடம் அரிப்பு ஏற்படுமே என்று கேட்க..
அது அப்படித்தான்.. வேறு நல்லதண்ணீர் டேங்கரில் கொண்டு வந்து கட்டிடம் கட்ட முடியாது என்று ஒப்பந்தக்காரர் சொல்லிவிட்டதால் பணியை நிறுத்துங்கள் என்று மக்கள் குரல் உயர்த்தினார்கள். அதன்பிறகு ஒருநாள் டேங்கரில் நல்லதண்ணீர் கொண்டு வந்து பணிகள் நடந்துள்ளது.
இதை எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவே இல்லையாம். ஒப்பந்தம் எடுத்தவர் முதல்வருக்கு வேண்டப்பட்டவர் என்பதால் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று சொல்லும் இளைஞர்கள் மக்கள் பணத்தை மக்களுக்காக செலவு செய்யும் போது அதை நல்ல முறையில் செலவு செய்யாமல் இப்படி செய்வதறக்கு எப்படி மனசாட்சி இடம் கொடுக்கிறது. சொந்த வீடாக இருந்தால் இப்படி கட்ட அனுமதிப்பார்களா? என்கின்றனர்.