தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி உமா மகேஷ்வரி. இவரிடம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற இட புரோக்கர் கடந்த 2018ஆம் ஆண்டு அரசு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இடத்தைக் குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். பின்னர் அந்த இடத்தைப் பட்டா செய்து தருவதாக சிறிது, சிறிதாக 70 லட்சம் வரை வாங்கியதாக தெரிகிறது. இதில், அப்போதைய மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவியாளர், கம்யூட்டர் ஆப்பரேட்டர், ஆண்டிபட்டி துணை வட்டாட்சியர் ஆகியோர் மூலம் உமா மகேஷ்வரிக்கு போலி பட்டா தயார் செய்து கொடுத்துள்ளார்.
அந்த இடத்தினைப் பத்திர பதிவுசெய்ய அப்போதைய ஆண்டிபட்டி சார் பதிவாளர் பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு பத்திரம் பதிவு செய்யாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், போலியாக பட்டா தயார் செய்ததாகவும், பணம் வாங்கிக்கொண்டு பத்திரப் பதிவு செய்யவில்லை எனக் கூறியும் உமா மகேஷ்வரி ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் மகேந்திரா வர்மா, இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 15 நபர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அதன்பேரில் ஆண்டிபட்டி போலீசார் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த புரோக்கர் ராஜா, அவருடைய மனைவி ரேவதி, மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவியாளர் தங்கபாண்டி, ஆண்டிபட்டி தாலுகா அலுவலக கம்யூட்டர் ஆப்பரேட்டர் சதீஸ், இதில் சம்பந்தப்பட்ட சக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், வைகை புதூர் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார், தங்கராஜ், பிராதுகாரன்பட்டியைச் சேர்ந்த சரவணன், ரமேஷ், கன்னியப்பபிள்ளைபட்டி கிராமத்தைச் சேர்ந்த உதயபாண்டி, ஆண்டிபட்டி சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்த சதீஸ், அப்போதைய ஆண்டிபட்டி துணை வட்டாட்சியர் அப்துல் நசீர் (தற்போது தேனி டாஸ்மாக் மேனேஜராக உள்ளார்), அப்போதைய ஆண்டிபட்டி சார்-பதிவாளர் உஷாராணி (தற்போது தேனி சார்-பதிவாளராக உள்ளார்),
அப்போதைய சின்னமனூர் இன்ஸ்பெக்டர் மாயன் (தற்போது ராயப்பன்பட்டி இன்ஸ்பெக்டராக உள்ளார்), அப்போதைய சின்னமனூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் (தற்போது திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் உள்ளார்) உள்ளிட்ட 15 பேர் மீது போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 15 பேர் மீது வழக்குப் பதிவுசெய்ய உத்தரவிட்டுள்ள நிலையில், போலீசார் அவர்கள் மீது தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையின் முடிவில் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.