Skip to main content

மணல் கடத்தலை தடுத்த அரசு அதிகாரி; கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல்

Published on 28/05/2023 | Edited on 28/05/2023

 

Government official who stopped sand theft; Police investigation

 

துறையூர் அருகே மணல் கடத்தலைப் பிடிக்கச் சென்ற வருவாய்த்துறை அதிகாரி மேல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் பிரபாகரன்(36). இவரது கட்டுப்பாட்டில் துறையூர் உட்பட பதினாறு கிராமங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் துறையூர் வட்டாட்சியர் வனஜாவுக்கு நரசிங்கபுரம் கிராமத்தில் மணல் கடத்துவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வட்டாட்சியர் வனஜா அப்பகுதியின் வருவாய் ஆய்வாளரான பிரபாகனுக்கு தகவல் அளித்தார். உடனடியாக சம்பவ இடமான பச்சமலை அடிவாரத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு மண் அள்ளிக் கொண்டிருந்ததைக் கண்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், உடனடியாகத் தடுத்து ஜேசிபி எந்திரத்தின் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

 

அப்போது நரசிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவரான மகேஸ்வரன், ஜேசிபி உரிமையாளரான தனபால் மற்றும் மணி ஆகிய 3 பேரும் பிரபாகரனை வழி மறித்து தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். சாலையில் கிடந்த கருங்கல்லை எடுத்து பிரபாகரனின் தலை, கை, கால் போன்ற இடங்களில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் மணி என்பவர் பிரபாகரனின் கழுத்தின் பின்புறம் மிகவும் கொடூரமாக கடித்துள்ளார். இத்தகைய கொடூரத் தாக்குதலில் நிலை குலைந்து போன பிரபாகரனை ஊர்ப் பொதுமக்கள் மீட்டு பெருமாள்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இது பற்றி வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார், நரசிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஷ்வரன் மற்றும் ஜேசிபி உரிமையாளர் தனபால் அவரது நண்பர் மணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான 3 பேரையும் வலை வீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்