Skip to main content

அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் வாங்குவதற்கு எதிரான வழக்கு!- அரசும், லஞ்ச ஒழிப்புத்துறையும் பதிலளிக்க உத்தரவு!

Published on 31/12/2019 | Edited on 31/12/2019

அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் வாங்கக் கூடாது என்ற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை அமல்படுத்தும்படி, அனைத்து அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

வேலூர் மாவட்டம், கீழ் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புத்தாண்டை ஒட்டி, சார்பு பணியாளர்கள், தங்கள் உயரதிகாரிகளைச் சந்தித்து பரிசுப் பொருட்கள் வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்ததாகவும், சுதந்திரத்துக்குப் பிறகும் தற்போது வரை, இந்த நடைமுறை தொடர்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். உயரதிகாரிகளிடம் இருந்து பிரதிபலனை எதிர்பார்த்தே இதுபோல பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

government officers gift chennai high court order


பரிசுப் பொருட்கள் வாங்குவோருக்கும், வழங்குபவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்து, இந்த சட்டவிரோத நடைமுறையைத் தடுக்கக் கோரி அரசுக்கு மனு அனுப்பியதாகவும், அதற்கு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அளித்த பதிலில், எந்தத் துறை என்பதைக் குறிப்பிட்டுத் தெரிவிக்கும்படி கூறியிருந்ததாக மனுவில் தெரிவித்துள்ளார்.
 

பரிசுப் பொருட்கள், வரதட்சணை பெறக்கூடாது என காவல் துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்ப டிஜிபி- க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளதையும் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

அரசு ஊழியர்கள், தாங்களோ, தங்கள் குடும்பத்தினர் மூலமோ, பரிசுப் பொருட்களைப் பெறக் கூடாது என்ற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதியைக் கண்டிப்புடன் அமல்படுத்தும்படி, அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வு, இதுகுறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், லஞ்ச ஒழிப்பு துறைக்கும் உத்தரவிட்டது.
 

சார்ந்த செய்திகள்