விழுப்புரம் அருகில் உள்ள கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுராஜ். இவர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்திடம் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், விழுப்புரம் மாவட்டம் ஏழு செம்பொன் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் தற்போது சென்னை பல்லாவரம் பகுதியில் வசித்து வருகிறார். அவருடன் அவரது நண்பர், சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் இருவரும் கடந்த 2017ல் அறிமுகமானார்கள். அவர்கள் பல்வேறு நபர்களுக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் அதேபோல் எங்களுக்கும் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறினார்கள்.
இதில் சம்பந்தப்பட்ட சக்திவேல் என்பவர் எனக்கு உறவினர் என்பதால் அவர்கள் கூறியதை நாங்கள் முழுவதுமாக நம்பினோம். இந்த நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த ராமலிங்கம், தேவி மகாலிங்கம், சுந்தரவேல் ஆகியோர் வாடகை கார் எடுத்துக் கொண்டு சக்திவேல் அழைத்ததின் பேரில் 2017ம் ஆண்டு சென்னை நங்கநல்லூருக்கு சென்றோம். அங்கு என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்த ஹரிகுமார் என்பவர் வீட்டிற்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். அங்கு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ரயில்வே துறையில் எங்களுக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்தனர். அதன் பெயரில் நாங்கள் ஐந்து பேரும் சேர்ந்து 18 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை தவணை முறையில் அவர்களிடம் கொடுத்தோம்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் எங்களிடம் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. பலமுறை எங்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்க கூறி வற்புறுத்தினோம். அவர்கள் மேலும் காலம் தாழ்த்தி வந்ததால் நாங்கள் கொடுத்த பணத்தையாவது திருப்பித் தருமாறு கேட்டு பலமுறை அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் எங்களுக்கு பணத்தை தர முடியாது என கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலைக்காக கொடுத்த பணத்தை அவர்களிடமிருந்து பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.’ இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ஹரிக்குமார், பல்லாவரத்தைச் சேர்ந்த சக்திவேல், பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், ஹரிகுமார், சரவணன், ஆகியோரை கைது செய்வதற்காக தீவிரமாக தேடி வருகிறது.