Skip to main content

அரசு பணியில் சேரும் வயது வரம்பை தளர்த்தக் கோரிய மனு தள்ளுபடி!

Published on 18/05/2020 | Edited on 19/05/2020

 

government service Age limit issue

 

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளதால், அரசு பணியில் சேரும் அதிகபட்ச வயது வரம்பை தளர்த்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


கரோனா வைரஸ் பரவல் காரணமாக  பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள அதே வேளையில், நிவாரணப் பணிகளுக்கு செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், நிதிச்சுமையை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களின்  ஈட்டு  விடுப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகியன ஓராண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால், வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் பல இளைஞர்களின் கனவு  கேள்விக்குறியாகும் என்பதால், அவர்களுக்கு உச்சபட்ச வயது வரம்பை தளர்த்த அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை அமைந்தகரையை  சேர்ந்த வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் (திமுக) என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

 


அவர் தனது மனுவில், அரசு வேலையில் சேர்வதற்கான அதிகபட்ச வயது 35 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 34 வயதை கடந்தோர் இந்த அறிவிப்பால் பாதிக்கப்படுவார்கள்.  அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஓய்வு நீட்டிப்பு அறிவிப்பால், பாதிக்கப்படக்கூடிய நபர்களை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வயது வரம்பில் சலுகை வழங்கும் வகையில், தகுந்த உத்தரவு பிறப்பிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும்  அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, மனுதாரர் பாதிக்கப்பட்ட நபர் அல்ல என்றும்,  அரசு பணிகள் தொடர்பான விவகாரங்களில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனவும் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்