மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அசோக் நகரில் பாரதிதாசன் காலனி உள் பகுதிகளில், குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புயல் பாதிப்பை தடுக்க அரசு தவறிவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புயல் அறிவிப்பு முன்பே வெளியாகியும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதிலிருந்து அரசு தவறிவிட்டது. கடந்த காலங்களில் இதைவிட மழை பெய்தாலும் அரசு திட்டமிட்டு இருந்தால் பாதிப்பை குறைத்திருக்கலாம். மழைநீர் வடிகால் பணிகளுக்கு 4,000 கோடி செலவிட்டும் அதன் நோக்கம் நிறைவேறவில்லை. மழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குடும்பங்கள் பொருளாதார, வாழ்வாதார இழப்பைச் சந்தித்துள்ளனர். மூன்று நாட்களாகியும் வெள்ளம் வடியாத நிலையில், குடும்பத்திற்கு தலா 10,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.