சேலம் அருகே, அரசுப் பேருந்தில் பயணம் செய்து வரும் பள்ளி மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய, பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியம் பெரிய சோரகையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தாரமங்கலம் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் அரசுப் பள்ளிக்கு, மேட்டூரில் இருந்து நங்கவள்ளி வழியாக தாரமங்கலம் செல்லும் குறிப்பிட்ட ஒரு அரசுப் பேருந்தில் சென்று வருகின்றனர். குறிப்பிட்ட அந்தப் பேருந்தின் ஓட்டுநராக உள்ள முருகேசன், மாணவிகளை கடுமையான வார்த்தைகளால் திட்டுவதாகவும், சிலரை இழிவுபடுத்தி பேசுவதாகவும் புகார்கள் கிளம்பின. இதனால் மாணவிகள் சிலர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதுகுறித்து மாணவிகள் அவர்களின் பெற்றோர்களிடம் புகார் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், செப். 28ம் தேதி மேட்டூரில் இருந்து நங்கவள்ளி வழியாக தாரமங்கலம் சென்ற அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாரமங்கலம் காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் மக்களிடம் சமாதானாப் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசுப் போக்குவரத்துக் கிளை மேலாளர், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில், மாணவிகளிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாக அரசுப் பேருந்து ஓட்டுநர் முருகேசனை பணியிடைநீக்கம் செய்து, அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில் தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.