தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அதற்கான கொண்டாட்டத்திற்காக மக்கள் தயாராகி வருகின்றனர். தங்களுக்குத் தேவையான புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காகக் கடைவீதிகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் பொழுது கரோனா கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்த நிலையில், இந்த முறை பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் மஹாவீர் ஜெயந்தி மற்றும் நினைவு நாளன்று இறைச்சிக் கடைகள் செயல்படத் தடை விதிக்கப்படும். இந்நிலையில் வரும் நவம்பர் 4-ஆம் தேதி மஹாவீர் நினைவு நாள் வர இருப்பதால் இறைச்சிக் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தீபாவளியன்று அனைத்து பகுதிகளிலும் இறைச்சிக் கடைகளைத் திறந்து வைக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களின் உணர்வுகளைக் கருதியும், பல்வேறு அமைப்பினர் வைத்த கோரிக்கைகளைப் பரிசீலித்தும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் இறைச்சிக் கடைகள் மூடப்படும். ஜெயின் மத வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இறைச்சிக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது.