வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பக் கூடிய பயணிகளில் பலர், தங்கத்தை முறையான வரி செலுத்தாமல் இந்தியாவிற்குள் கொண்டு வருவதில் ஒவ்வொருவரும் புதிய முறையைக் கையாண்டு வருகின்றனர். பலர் தங்களுடைய உடைமைகளை மறைத்து வைத்தும், பலர் கணிப்பொறி சாதனங்களில் மறைத்து வைத்தும், சிலர் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களில் மறைத்து வைத்தும் கொண்டு வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து புறப்பட்டு தமிழகத்துக்கு வரக்கூடிய பயணிகள் பலர் தங்கம் கடத்தி வருவதை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கண்டுபிடிக்கும் நிகழ்வு தினமும் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. நேற்று (27.04.2021) இரவு கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது மன்னார்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர், தன்னுடைய கைப்பையில் வைத்திருந்த கட்டிங் பிளையருக்குள் வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அவர் கொண்டு வந்திருந்த கட்டிங் பிளையர் சற்று வித்தியாசமாக இருந்ததால் அதைப் பரிசோதித்த அதிகாரிகள், அதற்குள் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 217 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.