Skip to main content

யுவராஜை வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சி!

Published on 13/12/2018 | Edited on 13/12/2018
go

 

கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள யுவராஜை வீடியோ கான்பரன்ஸ் மூலம் பார்த்து அரசுத்தரப்பு சாட்சி, அடையாளம் காட்டினார்.


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23), கடந்த 24.6.2015ம் தேதியன்று, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அவர், ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.


இது தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனத்தலைவர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, கார் ஓட்டுநர் அருண், சங்கர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் ஜோதிமணி என்ற பெண் குடும்பத் தகராறின்போது சுட்டுக்கொல்லப்பட்டார். அமுதரசு என்பவர், ஜாமினில் வெளியே சென்றிருந்தபோது தலைமறைவாகிவிட்டார்.

 

go


இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை கடந்த 2018, ஆகஸ்ட் 30ம் தேதி முதல், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி இளவழகன் விசாரித்து வருகிறார். விசாரணையின்போது ஜோதிமணி, அமுதரசு தவிர யுவராஜ் உள்ளிட்ட 15 பேரும் தொடர்ந்து ஆஜராகி வருகின்றனர்.  


இன்று (டிசம்பர் 12) மொத்தம் நான்கு சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. சம்பவம் நடந்த காலக்கட்டத்தில் பணியில் இருந்த ரயில்வே கேங்மேன்கள் ராஜன், சுஜீஸ் கோட்டாசேரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் அருண், கரூர் மாவட்டம் பெரிய குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.

 

m


கேங்மேன் சுஜீஸ் கோட்டாசேரி, 23.6.2015ம் தேதியன்று கேட்மேன் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறினார். யுவராஜ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சென்றதாகக் கூறப்படும் எம்எம்&540 பதிவெண் கொண்ட ஜீப் ரயில்வே கேட்டை கடந்து சென்றதைப் பார்த்தீர்களா? என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி கேட்டார். அதற்கு அவர், அப்படி எந்த வாகனமும் சென்றதாகத் தெரியவில்லை என்றார். 


மேலும், அரசுத்தரப்பு வழக்கறிஞர் கேட்ட பல வினாக்களுக்கும் அவர் 'தெரியாது', 'இல்லை' என்றே பதில் கூறினார். இதையடுத்து, எதிரிகளின் மிரட்டலுக்கு பயந்து, பிறழ் சாட்சியம் அளிப்பதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறினார். அதற்கு அவர் 'இல்லை' என்று பதில் அளித்தார். 


மற்றொரு ரயில்வே ஊழியர் ராஜன், அரசுத்தரப்புக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தார். இதையடுத்து அவரிடம் யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜிகே என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கு விசாரணை நடத்தினார்.


அப்போது வழக்கறிஞர் ஜிகே, ''24.6.2015ம் தேதியன்று டிஎஸ்பி விஷ்ணுபிரியா உங்களை விசாரித்தபோது, நீங்கள் காலை 8 மணியளவில் பணியில் இருந்தீர்கள். அப்போது 381/11&13 அப்லைன் ரயில் வழித்தடத்தில் பிரேதம் (கோகுல்ராஜின் உடல்) ஏதும் கிடந்ததா?,'' என்று கேட்டார்.


அதற்கு ராஜன், பிரேதம் ஏதும் ரயில் தண்டவாளத்தில் இல்லை என்று பதில் அளித்தார். பின்னர் வழக்கறிஞர் ஜிகே, ''பின்னர் அதே ரயில் பாதையில் நீங்கள் காலை 11.30 மணியளவில் திரும்பி வந்தபோது அங்கே பிரேதம் கிடந்ததா?,'' என்று கேட்டார். அதற்கு ராஜன், 'ஆமாம்' என்று கூறினார்.


ராஜன் அரசுத்தரப்புக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தார் என்றாலும், பிரேதம் கிடந்த தகவலைச் சொன்னதில் முரணான பதிலையே கூறியது சற்று பின்னடைவாக சிபிசிஐடி தரப்பு கருதுகிறது. 

 

ar


நாமக்கல்லை சேர்ந்த அருண், 'யுவராஜை போஸ்டரில் பார்த்ததாக ஞாபகம் இருக்கிறது என்று முதலில் கூறினார். பின்னர் நாமக்கல்லில் நடந்த ஓர் ஆலோசனைக் கூட்டத்தில் யுவராஜ் கலந்து கொண்டார். அப்போது பார்த்தேன்,'' என்றார். அவரிடம் அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி, ''யுவராஜை நேரில் பார்த்தால் அடையாளம் சொல்ல முடியுமா?'' என்று கேட்டார்.


ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருச்சி வருகையையொட்டி, ஒட்டுமொத்த போலீசாரும் அவருடைய பந்தோபஸ்து பணிக்குச் சென்று விட்டனர். இதனால், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த யுவராஜை எஸ்கார்ட் எடுக்க போதிய போலீசார் இல்லாததால் அவர் இன்று நடந்த சாட்சி விசாரணைக்கு ஆஜராகவில்லை. 


பின்னர், வீடியோ கான்பரன்சிங் மூலம் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அருண், அவரை பார்த்து இவர்தான் யுவராஜ் என்று அடையாளம் காட்டினார். ஆயினும், அவர் அரசுத்தரப்பு வழக்கறிஞரின் பல கேள்விகளுக்கு 'தெரியாது', 'இல்லை' என்று பிறழ் சாட்சியம் அளித்தார். கரூர் மகேஷ்வரனும் பிறழ் சாட்சியம் அளித்தார். 


இதையடுத்து அடுத்தக்கட்ட சாட்சிகள் விசாரணையை வரும் 20.12.2018ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். 

 

சார்ந்த செய்திகள்