உளுந்தூர்பேட்டையில் 200 நாட்களுக்குப் பிறகு, இன்று காலை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், 3 மணி நேரத்தில் ரூபாய் 1 கோடியே 25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம். அதுபோலவே, காலை 7 மணி முதல் 10 மணி வரை ஆட்டுச் சந்தையும் நடந்துவந்தது. தமிழகத்தில் பிரதானமாக விளங்கும் ஆட்டுச் சந்தைகளில் உளுந்தூர்பேட்டை சந்தையும் ஒன்று.
உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தை, கடந்த மார்ச் மாத இறுதியில் ஏற்பட்ட கரோனா பெருந்தொற்று காரணமாக, 200 நாட்களாக நடைபெறவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த தளர்வுகளோடு ஊரடங்கு அமலில் இருந்துவந்த நிலையில், கடந்த வாரம் உளுந்தூர்பேட்டை வாரச் சந்தையில் காய்கறி சந்தை இயங்கியது.
அதனைத் தொடர்ந்து இந்த வாரம் முதல் ஆட்டுச் சந்தை நடைபெறும் என பேரூராட்சி மூலம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, உளுந்தூர்பேட்டை வாரச் சந்தையையொட்டி ஆட்டுச் சந்தை அதிகாலையில் தொடங்கியது. உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், செங்கல்பட்டு, சேலம், புதுச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் குவிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தைக்கு ஆடுகள் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன்படி, காலை 7 மணி முதல் 10 மணி வரை சுமார் 3 மணி நேரத்தில் விவசாயிகள் கொண்டு வந்திருந்த சுமார் இரண்டாயிரம் ஆடுகள், ரூபாய் 5,000 முதல் 7,000 வரை விற்பனையானது. விற்பனையான ஆடுகளின் மதிப்பு ரூபாய் 1 கோடியே 25 லட்சம் இருக்கும் எனக் கருதப்படுகிறது. 200 நாட்களுக்குப் பிறகு ஆட்டுச் சந்தை நடைபெற்றதால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.