கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஆடுகள் மற்றும் காய்கறிகள் சந்தை புதன்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.
இந்த சந்தைக்கு உளுந்தூர்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளைக் கொண்டுவந்து விற்பனை செய்வது வழக்கம். இதற்காக விழுப்புரம், கடலூர், சென்னை, திருச்சி, சேலம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்ல வருகின்றனர். மேலும் பண்டிகை காலங்களின் போது இங்கு நடைபெறும் சந்தையில் ஆடுகள் விற்பனை பல கோடிகளுக்கு வியாபாரமாவது வழக்கம்.
தமிழக அரசின் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்திற்காக இந்தச் சந்தையில், ஆடுகள் வழங்குவது உண்டு. மேலும் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் பக்ரீத், தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் உட்பட அனைத்து மதப் பண்டிகை காலங்களிலும் நடைபெறும் சந்தையின் போது ஆடுகள் விற்பனை அதிகரிக்கும்.
அதன்படி தற்பொழுது பொங்கலை முன்னிட்டு நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஆடுகள் சந்தையில், ஒரே நாளில் சுமார் இரண்டு கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை ஆகி உள்ளது என்று வியாபாரிகள் கூறுகின்றனர். இப்படி விலைக்கு விற்கப்பட்ட ஆடுகளை ஏற்றிச் செல்வதற்காக மினி டெம்போ, டாட்டா ஏசி, லாரிகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் உளுந்தூர்பேட்டையில் அணிவகுத்து நின்றன. சமீபகாலமாக பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விற்பனையும், மட்டன் சிக்கன் போன்ற அசைவங்கள் விற்பனையும் அதிகரித்து வருகிறது.