ஆடு காணாமல்போன நிலையில், அதனைத் தேடிப் பார்த்தபோது ஆட்டின் தலை கசாப்புக் கடையில் இருப்பதைக் கண்டு, அந்தத் தலையுடனேயே காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, கரம்பக்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் கடந்த சில மாதங்களில் பல ஆடுகள் திருடப்பட்டுள்ளது. நள்ளிரவுக்கு பிறகு அதிகாலை நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் வரும் திருடர்கள் சாலை ஓரங்களில் உள்ள வீடுகளில் நிற்கும் ஆடுகளை திருடிச் சென்றுவருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் காரில் சிலர் ஆடு திருடியுள்ளனர். கொத்தமங்கலத்தில் மேய்ந்து கொண்டிருந்த பல ஆடுகளில் ஒரு ஆட்டை மோட்டார் சைக்கிளில் தூக்கிச் சென்ற மர்ம நபர், சத்தம் போட்ட பெண்ணை கத்தியை காட்டி மிரட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு 3 ஆடுகளை ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் திருடிக்கொண்டு வேகமாக கீரமங்கலம் - குளமங்கலம் சாலையில் செல்லும்போது, பொதுமக்கள் விரட்டியும் நிற்காமல் சென்றுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வடகாடு புள்ளாச்சிகுடியிருப்பில் சாலையோர வீட்டில் கட்டி வைத்திருந்த 3 குட்டிகளை ஈன்ற ஒரு ஆட்டை மர்ம் நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். தாய் ஆட்டை காணாமல் 3 குட்டிகளும் தவித்து வருகிறது.
கீரமங்கலத்தில் சந்திரசேகர் என்பவரது வீட்டில் கட்டி இருந்த 2 ஆடுகளை நேற்று முன்தினம் இரவு திடீரென காணவில்லை. நேற்று காலை கீரமங்கலம் பகுதியில் உள்ள ஒவ்வொரு கறிக் கடைக்கும் சந்திரசேகர் மற்றும் அவரது நண்பர்கள் திருடுபோன ஆட்டை தேடிச் சென்றனர். கீரமங்கலம் கடைவீதி வேம்பங்குடி மேற்கு பகுதியில் உள்ள கறிக்கடையில் காணாமல்போன தனது ஆட்டு தலையும் கால்களும் இருப்பதைப் பார்த்த சந்திரசேகர் மற்றும் அவரது நண்பர்கள் ஆட்டுத் தலையை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளனர். அதிகாலை காணாமல்போன எங்கள் இரண்டு ஆட்டில் ஒன்று கறிக்கடையில் அறுக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆடு திருடர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க கேட்டனர்.
சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உள்ளிட்ட போலீசார் திருட்டு ஆடு வாங்கி கறிக்கடை நடத்தியவர்களை அழைத்து வந்து விசாரணை செய்தபோது, சிலர் இந்த ஆடுகளை கொண்டு வந்து விற்றதாகவும் திருட்டு ஆடுகள் என்பது தெரியாது என்றும் விசாரணையில் கூறியுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து சில ஆடுகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து இரவில் ஆடுகளை திருடி கறிக்கடைகளில் விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அவர்களை கீரமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர். அவர்களை பிடித்து விசாரணை செய்யும்போது மேலும் திருடப்பட்ட ஆடுகள் பற்றிய விபரம் தெரிய வரலாம். ஆட்டு தலையை வைத்து திருட்டை கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.